

சென்னை,
கரூரில் நடந்த தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பி வருவதாக கூறி 25 பேர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர்களில் சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பாஜக மாநில செயலாளர் சகாயம் (வயது 38), தவெக உறுப்பினர் மாங்காடு பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன் (36), தவெக நிர்வாகி ஆவடியைச் சேர்ந்த சரத்குமார் (32) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 22 பேரை தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில், கரூரில் விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியான விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை பரப்பியதாக கூறி யூடியூபர் மாரிதாசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்த மாரிதாசை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக இதே விவகராம் தொடர்பாக யூடியூபர் பெனிக்ஸ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.