கரூர்: போலீசாரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி சுட்டுப்பிடிப்பு


கரூர்: போலீசாரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி சுட்டுப்பிடிப்பு
x

ரவுடி தமிழழகன் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கரூர்,

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னாண்டாங்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பென்சில் தமிழழகன். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். இவரது கூட்டாளிகளான பிரகாஷ், ஹரிஹரன், மனோஜ் ஆகியோர் 4 பேரும் கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பேருந்துக்காக காத்திருந்த பயணி ஒருவரிடம் காரணம் இல்லாமல் வாக்குவதத்தில் ஈடுபட்டு அந்த பயணியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட பயணி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் தமிழழகனின் கூட்டாளிகளான பிரகாஷ், ஹரிஹரன், மனோஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தமிழழகன் தப்பி ஓடி தலைமறைவானார். இதனையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் அருகில் வைத்து தமிழழகனை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியபோது, போலீசாரை அரிவாளால் தமிழழகன் தாக்கி விட்டு தப்பி ஓட முயற்சித்துள்ளார். இதனை சுதாரித்துக்கொண்ட காவல் ஆய்வாளர் மணிவண்ணன் துப்பாக்கியால் தமிழழகனின் வலது காலில் முட்டிக்கு கீழே சுட்டார். இதில் அந்த இடத்திலேயே ரவுடி சுருண்டு விழுந்தார்.

இதனையடுத்து அவரை போலீசார் பிடித்தனர். உடனே காலில் காயமடைந்த ரவுடி தமிழரசன் கைது செய்த போலீசார் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். இந்த சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story