

சென்னை,
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணையை மேற்பார்வையிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மேற்பார்வைக் குழுவை நியமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரூர் த.வெ.க. கூட்டநெரிசல் வழக்கில் சாட்சிகளின் சுதந்திரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்பார்வைக் குழுவுக்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மேற்பார்வைக் குழுவுக்கு ஆர்.எஸ்.பாரதி மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
“முதல்-அமைச்சர் விஜய் 10-ந்தேதி(நாளை) கரூருக்கு சென்று த.வெ.க. கூட்டநெரிசலில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையிலான அரசுப் பணிக்கான பணி நியமன ஆணைகளை வழங்க உள்ள நிலையில், நடைபெற்று வரும் விசாரணையில் சாட்சிகளாக உள்ள அந்தக் குடும்பத்தினர் மீது எந்தவிதமான செல்வாக்கும் செலுத்தப்படவோ, அவர்களுடன் தலையீடு மேற்கொள்ளப்படவோ கூடாது என்பதற்கான போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரும் சி.பி.ஐ.யும் மேற்கொள்ளுமாறு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
கடந்த 07.07.2026 அன்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய உத்தரவின் அடிப்படையில், சட்டரீதியான தீர்வுகளை நாடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கையுடன் ஏற்கனவே மேற்பார்வைக் குழுவிடம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு அரசின் நிவாரணம், கருணை அடிப்படையிலான பணி நியமனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு தமக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை.
ஆனால் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்பட்ட அதே சம்பவத்தின் முக்கிய சாட்சிகளுக்கு வழங்கப்படும் நலன்கள் தொடர்பாக - சாட்சிகளுடன் அரசு நிர்வாகம் நேரடியாக தொடர்புகொள்வது, விசாரணையின் சுதந்திரம் மற்றும் நியாயத்தன்மை குறித்து நியாயமான ஐயத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இவ்வழக்கின் சாட்சிகள் மீது இந்த நலத்திட்ட உதவிகளால் எந்தவிதமான தாக்கமும் ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.