கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ அலுவலகத்தில் 2-வது நாளாக தவெக நிர்வாகிகள் ஆஜர்


கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ அலுவலகத்தில் 2-வது நாளாக தவெக நிர்வாகிகள் ஆஜர்
x
தினத்தந்தி 30 Dec 2025 11:44 AM IST (Updated: 30 Dec 2025 12:31 PM IST)
t-max-icont-min-icon

சி.பி.ஐ. அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி,

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தினார். அப்போது நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதனையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அவர்களுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது.

அதன்படி, புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட 4 பேரும் நேற்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜராகினர். காலையில் தொடங்கிய விசாரணை இரவு 7.25 மணி வரை நீடித்தது. சுமார் 9 மணி நேரத்திற்கு மேலாக இந்த விசாரணை நீடித்தது. இந்த விசாரணை தொடர்ந்து விஜய்க்கும் சம்மன் அனுப்ப சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் 2-வது நாளாக இன்றும் தவெக நிர்வாகிகள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆஜராகியுள்ளனர். அதேபோல் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஷ் தங்கையா மற்றும் காவல்துறை அதிகாரிகளும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரி சுனில்குமார் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story