கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; பா.ஜ.க. கவுன்சிலரின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு மறுப்பு

மனுதாரர் மதுரை ஐகோர்ட்டு கிளையை அணுக வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை,
கரூர் மாவட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி பா.ஜ.க. கவுன்சிலர் உமா ஆனந்தன், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் தங்கள் கடமையை செய்யத் தவறியதால் தான் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் தேர்தல் வரவிருக்கும் சமயத்தில் இந்த சம்பவத்திற்கு பின்னால் ஏதேனும் சதித்திட்டம் இருக்குமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் உமா ஆனந்தன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில், இன்று நீதிபதிகள் வேல்முருகன், நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால நீதிமன்ற அமர்வு முன்பு உமா ஆனந்தன் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, தங்கள் வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முறையிட்டார்.
இந்த முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதிகள், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிப்பதற்கான அதிகார அமர்வு மதுரை ஐகோர்ட்டு கிளை அமர்வின் கீழ் தான் வருகிறது என்பதால், மனுதாரர் மதுரை ஐகோர்ட்டு கிளையை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தி, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டனர்.






