கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: காவல்துறை விசாரணை தொடக்கம்

கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கரூர்,
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மேலும் பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூரில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த இடத்திற்கு ஏ.டி.ஜி.பி. தேவாசீர்வாதம் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை தொடங்கியுள்ளது. இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






