கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பறிமுதல் செய்யப்படும் விஜய் பிரசார வாகனம்?

வழக்குப்பதிவு செய்து, விஜய்யின் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்யலாம் என்று கோர்ட்டு நேற்று உத்தரவிட்டிருந்தது.
சென்னை,
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் நடத்தும் ‘ரோடு ஷோ'வுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும், அதுவரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், ‘வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் ‘ரோடு ஷோ' நடத்த அனுமதி வழங்கப்படாது' என்றார்.
போலீசார் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் அரசு வக்கீல் அசன் முகமது ஜின்னா, ‘கரூரில் 41 பேர் பலியான வழக்கில் புலன் விசாரணை சரியான பாதையில் செல்கிறது' என்றார்.
விசாரணையின்போது நீதிபதி, ‘இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார். பின்னர், ‘கரூர் சம்பவம் தொடர்பான வீடியோக்களை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. இந்த வழக்கில் த.வெ.க.வைச் சேர்ந்த 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஓரிரு நிபந்தனைகளை தவிர பெரும்பாலான நிபந்தனைகள் மீறப்பட்டு உள்ளதாகவே தெரிகிறது. கரூர் பிரசாரத்துக்கு சென்றபோது விஜய் பயணித்த பஸ் மோதி ஒரு விபத்து ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக தனியாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்பட்டு உள்ளதா?.
வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு என்ன தயக்கம்?. இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யாவிட்டால் போலீசாரை மக்கள் எப்படி நம்புவார்கள்?. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு போலீசார் கருணை காட்டுவதை ஏற்க முடியாது. விபத்து தொடர்பாக தனியாக வழக்குப்பதிவு செய்து, பிரசார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா?' என்றார். பின்னர், ‘இந்த விவகாரத்தை கோர்ட்டு கண்மூடி வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது' என நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
‘கலவரம் நடப்பது போல் நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். அனைத்தையும் காவல்துறை அனுமதித்துள்ளது' எனக்கூறி அதிருப்தியை வெளிப்படுத்திய நீதிபதி, ‘இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?’ என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக வழக்குப்பதிவு செய்து, விஜய்யின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்யலாம் என்று ஐகோர்ட்டு நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டிருந்தநிலையில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.






