கரூர் கூட்ட நெரிசல்: சம்பவ இடத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
ஐகோர்ட்டு அமைத்த சிறப்பு புலனாய்வு குழு சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணையை தொடங்கியது.
சென்னை,
கரூரில் கடந்த மாதம் 27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டு அமைத்த சிறப்பு புலனாய்வு குழு சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணை தொடங்கியது.
முன்னதாக இதுவரை விசாரணை மேற்கொண்டு வந்த ஏ.டி.எஸ்.பி. பிரேம் ஆனந்த், வழக்கின் கோப்புகள் மற்றும் ஆதாரங்களை ஐ.ஜி.அஸ்ரா கார்க்கிடம் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து தற்போது கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் இருந்து ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், அப்பகுதி மக்கள் என பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவில், டி.எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி, ஆய்வாளர்கள் என மேலும் 8 அதிகாரிகள் இன்று சேர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.








