கரூர்: பயன்பாட்டிற்கு வந்த சுங்ககேட் பயணிகள் நிழற்குடை


தினத்தந்தி 2 May 2025 12:09 PM IST (Updated: 2 May 2025 12:09 PM IST)
t-max-icont-min-icon

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக கரூர் சுங்ககேட் பயணிகள் நிழற்குடையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

கரூர்

குளித்தலை, கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை, மாயனூர், புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் கரூர் சுங்ககேட் பஸ் நிறுத்தத்தில் இறங்கி மற்றொரு பஸ் மூலம் கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், தாந்தோன்றிமலை பெருமாள் கோவிலுக்கு செல்வார்கள். மேலும் சுங்ககேட் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுங்ககேட் பஸ் நிறுத்தத்தில் நின்றுதான் பஸ் ஏறி சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் கரூர் சுங்ககேட்டில் பயணிகளின் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்த நிழற்குடையில் பயணிகள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் நாளடைவில் சுங்ககேட் நிழற்குடையில் இருக்கைகள் உடைந்தும், காணாமலும் போய்விட்டன. இதன் காரணமாக பயணிகள் நிழற்குடையில் இருக்கைகள் இல்லாமல் இருந்தன. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் உட்கார முடியாமல் நின்று கொண்டே இருக்கும் சூழல் ஏற்பட்டது.

நீண்ட நேரம் நிற்க முடியாத முதியவர்கள் தரையில் அமர்ந்து செல்லும் நிலை இருந்தது. இதனால் சுங்ககேட் பயணிகள் நிழற்குடையில் இருக்கை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக கடந்த மாதம் தினந்தந்தி நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக சுங்ககேட் பயணிகள் நிழற்குடையில், பயணிகள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கும் பணி கடந்த மாதத்தில் நடைபெற்றது.

தற்போது இருக்கைகள் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடைந்தது. இதனையடுத்து சுங்ககேட் பயணிகள் நிழற்குடை இருக்கைகளை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பயணிகள், சமூக ஆா்வலா்கள் நன்றி தெரிவித்தனர்.

1 More update

Next Story