கரூர் துயர சம்பவம்: வேலுச்சாமிபுரத்தில் அருணா ஜெகதீசன் நேரில் ஆய்வு

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
கரூர் துயர சம்பவம்: வேலுச்சாமிபுரத்தில் அருணா ஜெகதீசன் நேரில் ஆய்வு
Published on

கரூர்,

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மேலும் பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூரில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஓரு நபர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. விஜய் பிரசாரம் செய்த வேலுச்சாமிபுரத்தில் ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது காவல்துறையினரிடம் சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் கேட்டறிந்தார். மேலும் கள நிலவரம் குறித்து அவரிடம் காவலர்கள் எடுத்துரைத்தனர். இதை அனைத்து அருணா ஜெகதீசன் கேட்டறிந்து கொண்டார்.

அதனை தொடர்ந்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து அருணா ஜெகதீசன் விசாரணை நடத்த உள்ளார்.  

X

Daily Thanthi
www.dailythanthi.com