கரூர் துயரம்: ஆம்புலன்ஸ் டிரைவர் குறித்து அவதூறு பரப்பியவர் மீது வழக்குப்பதிவு

கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
கரூர்,
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி பகுதியை சேர்ந்தவர் தரனீஷ்(வயது 35). இவர் புகழூர் நகராட்சி பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனம் வைத்து வாடகைக்கு ஒட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி அன்று கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் நின்றவாறு பேசினார்.
அப்போது விஜய் மீது மர்ம நபர் ஒருவர் காலணியை வீசியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் புகழூர் நகராட்சி பகுதியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் தரனீஷ் தான் விஜய் மீது செருப்பு வீசினார் என்று சமூக வலைதளங்களில் தரனீஷ் மீது அவதூறு பரப்பியும், தகாத வார்த்தைகளினால் திட்டியும் வலைதளங்களில் வீடியோ வைரலாகி வந்தது.
இந்நிலையில் விஜய் பிரசாரத்தின் போது மயங்கி விழுந்தவர்களை தனது ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல அங்கு சென்றதாகவும், தன் மீது அவதூறு பரப்பிய நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு தரனீஷ் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷினி சமூக வலைத்தளங்களில் தரனீஷ் மீது அவதூறு பரப்பிய நபர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகிறார்.






