கரூர் துயரம்: விரைவான விசாரணையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து இழப்பீடும் வழங்க எஸ்டிபிஐ கோரிக்கை


கரூர் துயரம்: விரைவான விசாரணையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து இழப்பீடும் வழங்க எஸ்டிபிஐ கோரிக்கை
x

இத்தகைய இக்கட்டான சூழலில், பாதிக்கப்பட்ட மக்களுடன் எஸ்டிபிஐ கட்சி துணைநிற்கிறது என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

சென்னை,

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கரூரில் தவெக தலைவர் விஜய் அவர்களின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட துயரமான சம்பவத்தில், கூட்ட நெரிசலால் 40 பேர் உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மாபெரும் துயரத்தில் ஏராளமானோர் படுகாயமடைந்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தப் பேரவலத்தில் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு, எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் முழுமையாக குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். இத்தகைய இக்கட்டான சூழலில், பாதிக்கப்பட்ட மக்களுடன் எஸ்டிபிஐ கட்சி துணைநிற்கிறது.

இந்த துயர சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆணையம், விரைவாகவும், நேர்மையாகவும் விசாரணையை மேற்கொண்டு உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாகத் தேவையான இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை அரசு வழங்க வேண்டும். குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் மருத்துவச் செலவுகளை முழுமையாக அரசே ஏற்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மேலும், தவெக தலைவர் விஜய், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் விரைவான இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இத்தகைய துயர சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, பொதுக்கூட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்தவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story