காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தால் வெறிச்சோடிய காசிமேடு மீன் சந்தை

திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மீன் விலை 50 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.
காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தால் வெறிச்சோடிய காசிமேடு மீன் சந்தை
Published on: 

சென்னை,

ஆந்திர மாநில கடலோர பகுதியில் சிறைபிடிக்கப்பட்ட சென்னை காசிமேட்டைச் சேர்ந்த 8 விசைப்படகுகளையும் உடனடியாக மீட்க வேண்டும், முரசு புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காசிமேடு மீன்பிடி துறைமுக வளாகத்தில் கருப்புக்கொடி கட்டி மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 4-வது நாளாக தொடர்வதால், காசிமேடு மீன் சந்தை வெறிச்சோடிக் காணப்படுகிறது. மீன்கள் வரத்து குறைந்துள்ள நிலையில் ஏற்கனவே பிடித்து வைக்கப்பட்டு இருந்த மீன்களை வைத்து பெண்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் காசிமேடு சந்தை, இன்று ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடியுள்ளது. தினசரி சுமார் 100 டன் கடல் உணவு வரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மீன் விலை 50 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. காசிமேடு துறைமுகத்தில் உள்ள சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வருகிற 24-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என சென்னை விசைப்படகு மீனவர் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

X