

சென்னை,
காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை கடந்த வாரங்களைவிட உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. வஞ்சிரம் மீன் கிலோ ரூ.950-க்கு விற்பனையானது.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு மீன்கள் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. இங்கு வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்களை வாங்குவதற்காக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் வருவது வழக்கம்.
இந்த ஆண்டு புரட்டாசி மாதம் தொடங்கியதையடுத்து, இந்துக்கள் பலர் அசைவ உணவுகளை தவிர்த்ததால் கடந்த 5 வாரங்களாக மீன் மார்க்கெட்டில் கூட்டம் குறைந்தது. புரட்டாசி மாதம் முடிந்த பின்னரும் ஆயுதபூஜை மற்றும் ஐப்பசி அன்னாபிஷேகம் உள்ளிட்ட விசேஷ நாட்கள் காரணமாக காசிமேட்டுக்கு மீன்கள் வாங்க எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் வர வில்லை.
இருப்பினும் நேற்று காசிமேடு மீன்மார்க்கெட்டுக்கு வழக்கமான மீன் வியாபாரிகளும், பொதுமக்களும் வந்து மீன்களை வாங்கிச் சென்றனர். ஆனாலும் மீன்களின் விலை கடந்த வாரங்களைவிட அதிகமாகவே இருந்தது. மீன்களின் வரத்து குறைவாக இருந்ததால் விலை உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மொத்த மீன் வியாபாரி ஒருவர் கூறும்போது, “தொடர்ந்து விசேஷ நாட்கள் வந்ததால் கூட்டம் குறைவாக இருந்தாலும், வழக்கமான வியாபாரிகளும், பொதுமக்களும் மீன்களை வாங்கிச் செல்கின்றனர். மீன்வரத்து குறைவாக இருப்பதால் விலை சற்று உயர்ந்துள்ளது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை அதிகளவில் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.
காசிமேட்டில் நேற்று விற்பனையான மீன்கள் விலை விவரம் (கிலோவுக்கு) வருமாறு:-
வஞ்சிரம் ரூ.950, கொடுவா ரூ.600, வவ்வால் சிறியது ரூ.500, பெரியது ரூ.800, சீலா ரூ.500, பாறை ரூ.500, சங்கரா ரூ.350, அயலை ரூ.250, சிறிய இறால் ரூ.250, பெரிய இறால் ரூ.600, கல் இறால் ரூ.1,200, கணவாய் (ஆக்டோபஸ்) ரூ.300, ஸ்க்விட் ரூ.400, கட்டில் கணவாய் ரூ.5,500.