கஸ்தூரி ரங்கன் உடல் இன்று தகனம்-அரசு மரியாதையுடன் நடக்கிறது

கஸ்தூரி ரங்கனின் உடல் தகனம் அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று நேற்று கர்நாடக அரசு அறிவித்தது.
பெங்களூரு,
பெங்களூரு கொடிகேஹள்ளியில் வசித்து வந்தவர் கஸ்தூரி ரங்கன் (வயது 84). இவர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராக 1994-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை இருந்தார். வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் கஸ்தூரி ரங்கன் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலையில் கஸ்தூரி ரங்கன் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மறைந்த கஸ்தூரி ரங்கனின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரு மேக்ரி சர்க்கிளில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வைக்கப்படுகிறது. அங்கு அவரது உடலுக்கு பொதுமக்கள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்த உள்ளனர். அவரது உடல் ஹெப்பாலில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பகல் 12 மணிக்கு பிறகு ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படுகிறது.இந்த நிலையில், கஸ்தூரி ரங்கனின் உடல் தகனம் அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று நேற்று கர்நாடக அரசு அறிவித்தது. அதன்படி கஸ்தூரி ரங்கனின் உடல் இன்று அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.






