

ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவில் இருந்து 16 கடல் மைல் தொலை விலும் நடுக்கடலில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் தமிழகம் மற்றும் இலங்கை மக்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள ராமேசுவரத்தில் இருந்து 3 ஆயிரம் பேர் செல்கின்றனர். ஆலயத்தின் முன்புள்ள கொடி மரத்தில் அந்தோணியாரின் உருவம் பொறித்த கொடியை நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் ஏற்றி வைக்கிறார்.
தொடர்ந்து ஆலயத்தில் திருவிழா திருப்பலி நடைபெற்று சிலுவைப்பாதை திருப்பலியும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட சப்பரத்தை இலங்கை கடற்படையினர் தோளில் சுமந்தபடி ஆலயத்தை சுற்றி வலம் வருவர். விழாவில் 2-ம் நாளான நாளை மறுநாள், காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி யாழ்ப்பாணம் மறை மாவட்ட பிஷப் தலைமையில் நடைபெறும்.
கச்சத்தீவு ஆலய திருவிழாவிற்கு ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் செல்ல பதிவு செய்துள்ளனர். நாளை காலையில் வரிசை எண் அடிப்படையில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு செல்ல உள்ளன. இதற்காக 75 விசைப்படகுகளும், 26 நாட்டுப்படகுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
விழாவை முன்னிட்டு ராமேசுவரத்தில் நேற்று முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 300-க்கும் அதிகமான நாட்டுப்படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் பாம்பன், தனுஷ்கோடி, தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமான விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.