

ஆண்டிப்பட்டி அருகே ஜம்புலிபுத்தூரில் பழமை வாய்ந்த கதலி நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் அன்ன வாகனம், சிம்ம வாகனம், ஆஞ்சநேயர், கருடர், ஆதிசேஷன், கஜேந்திர வாகனங்களில் பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடந்த 1-ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி, சமேத கதலி நரசிங்கபெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பிரசித்தி பெற்ற தேரோட்டம் நேற்று நடந்தது. அப்போது பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' என்று கோஷங்கள் எழுப்பி வடம் பிடித்து தேரை இழுத்தனர். அப்போது வாழையடி, வாழையாக விவசாயம் செழிக்க வாழைப்பழங்களையும், விதையுடன் பருத்தி பஞ்சுகளையும் பக்தர்கள் கூட்டத்தில் சூறைவிடப்பட்டது. விழாவில் ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர்.