கதிராமங்கலத்தில் வயலில் ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு பகுதியில் தீ வைக்கப்பட்டதால் பதற்றம்

கதிராமங்கலத்தில் எண்ணெய் கசிவு ஏற்படும் குழாய் அருகே குப்பையை போட்டு எரித்ததால் பதற்றம் அதிகரித்து உள்ளது.
கதிராமங்கலத்தில் வயலில் ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு பகுதியில் தீ வைக்கப்பட்டதால் பதற்றம்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் விளை நிலங்களுக்கு இடையே அமைக்கப்பட்ட ஓஎன்ஜிசி எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

விளைநிலங்களுக்கு இடையே போடப்பட்ட ஓஎன்ஜிசி எண்ணெய் குழாயில் திடீரென ஆங்காங்கே கசிவு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் கொப்பளித்துக் கொண்டு வெளியேறி வருகிறது. விளை நிலைங்களில் கச்சா எண்ணெய் பரவி வருவதால், தீப்பிடிக்கும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர். மிகப்பெரிய அசம்பாவிதம் நடக்கும் முன் ஓஎன்ஜிசி குழாய்களை அகற்றுமாறு கோரிக்கை வைத்து காலை முதலே சம்பவ இடத்தில் ஏராளமான கிராமத்தினர் குவிந்தனர். போராட்டம், போராட்டக்களமாக தொடங்கியது.

பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு தெரிவித்து பொதுமக்கள் கூட தொடங்கினார்கள். கோளாறை சரி செய்ய வந்த ஓஎன்ஜிசி அதிகாரிகளையும் கூட சம்பவ இடத்துக்குள் கிராம மக்கள் அனுமதிக்கவில்லை. அப்பகுதியில் பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் நீடித்தது. பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தை தொடங்கினர். ஏற்கனவே ஓஎன்ஜிசி புதியதாக எண்ணெய் குழாயை அமைக்கவே திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

மக்கள் போராட்டம் நடத்திய இடத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு உள்ளது. கதிராமங்கலத்தில் எண்ணெய் கசிவு ஏற்படும் குழாய் அருகே பொதுமக்கள் குப்பையை போட்டு எரித்ததால் பதற்றம் ஏற்பட்டது. பொதுமக்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். தீயை பச்சை செடிகளை கொண்டு அணைக்க முயற்சி செய்தார்கள். வயல் வெளியில் கிடந்த எண்ணெய்யை கொண்டு தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கதிராமங்கலத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ள பகுதியை பார்வையிட வந்த தஞ்சை எஸ்.பி.யை வரவிடாமல் தடுக்க குப்பையை போட்டு எரித்தனர் என கூறப்படுகிறது.

கதிராமங்கலத்தில் எண்ணெய் குழாய் அருகே குப்பையை போட்டு எரித்ததால் குழாய் தீப்பிடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

கதிராமங்கலத்தில் எண்ணெய் குழாய் கசிவை பார்வையிட வந்த போலீசாருடன் பொதுமக்கள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கதிராமங்கலத்தில் பொதுமக்கள் கற்களை வீசியதில் காவலர் காயம் அடைந்து உள்ளார். போராட்டக்கார்கள் மீது தடியடி நடத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. போராட்டம் அமைதியாக நடந்தது, யார் தீ வைத்தது என எங்களுக்கு தெரியாது என போராட்டக்காரர்கள் தெரிவித்து உள்ளனர். அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

போராட்டத்தில் கலந்துக் கொண்ட பெண்கள் பேசுகையில், விவசாய நிலம் பாதிக்கப்பட்டு வருவதை நீங்கள் (செய்தியாளர்கள்) பார்த்துக் கொண்டு தானே உள்ளீர்கள். எங்களின் கோரிக்கையை யாரிடம் சொல்ல முடியும். எத்தனை எரிகுழாய் வெடித்து உள்ளது என்பதை பார்க்கதானே செய்கிறீர்கள். எங்களுடைய பிரச்சனையை கேட்க யாருமே இல்லை சார், நீங்கள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள். இப்போது ஏற்பட்டு உள்ள உடைப்பை அடைத்து விட்டு எது நடக்காதது போன்று அவர்கள் இருந்து கொள்வார்கள். ஆட்சியர் வரும்போது எதுவும் நடக்கவில்லை என மறுத்துவிடுவார்கள். ஆட்சியர் வந்து பார்க்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாகும்.

இதுபோன்ற சம்பவமானது முன்னதாகவும் நடந்தது, ஆனால் அச்சம்பவம் மறைக்கப்பட்டுவிட்டது. இப்பகுதியில் எவ்வளவு கூரைகள் உள்ளது என்பதை பாருங்கள். எரிகுழாயை நீக்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கையாகும். எங்களுக்கு எவ்வளது பாதிப்பு ஏற்படும். எங்களால் குடிநீரை குடிக்கமுடியவில்லை. எண்ணெய் இல்லாமல் வாழ்ந்துவிடலாம், ஆனால் குடிநீர் இல்லாமல் எப்படி வாழமுடியும் நினைத்து பாருங்கள். ஏற்கனவே குடிநீரை எடுத்து சென்று பரிசோதனை செய்வதாக கூறினர், ஆனால் அறிக்கை வழங்கப்படவில்லை, எங்களுக்கு எங்கள் ஊரை சுற்றிஉள்ள 7 கிணறுகளையும் மூட வேண்டும் என்பதுதான்.

விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும் என கூறிஉள்ளனர். அவர்கள் தாங்கள் அமைதியாக போராட்டம் நடத்தியதாகவும், சாலையில் குப்பையில் தீ வைத்தது யார் என்றே தெரியாது. யாரோ செய்த தவறுக்கு அனைவரையும் எப்படி தாக்கலாம். எங்களுடைய கோரிக்கை ஆட்சியர் பார்க்கவேண்டும் என்பதுதான் சார் என பெண்கள் பேசினர். எண்ணெய் கசிவு 2 ஏக்கர் அளவில் விளை நிலத்தில் பரவி உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com