கவின் ஆணவப் படுகொலை இந்தியாவிற்கே அவமானம்: பிருந்தா காரத்

சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படுவது அவசியம் என மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத் வலியுறுத்தினார்.
நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் குடும்பத்தினரை, தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத், மாநில செயலாளர் சண்முகம் ஆகியோா் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா். பின்னர் பிருந்தா காரத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கவின் செல்வகணேஷ் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவிற்கே அவமானம். இது சாதி சார்ந்த விஷயங்களில் இந்தியாவின் தற்போதைய உண்மையான நிலையைக் காட்டுகிறது. திமுக அரசு கவின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும். இழப்பீடு மட்டும் ஆணவக் கொலைகளுக்கு போதாது. ஆணவப் படுகொலைகள் வட இந்தியாவில் அதிகளவில் நடைபெறுகின்றன. அந்த மாநிலங்களில் எல்லாம் பாஜக தான் ஆண்டு கொண்டிருக்கின்றது.
மேலும் 2014 முதல் 2025-ம் ஆண்டு வரை மத்திய சட்ட அமைச்சகத்திற்கு, ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற மத்திய சட்ட ஆணையம், தேசிய மகளிர் ஆணையம் ஆகியவற்றால் பல முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால் மோடி அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. எனவே திமுக அரசு இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழும் வகையில் ஆணவப் படுகொலைக்கு எதிராக உடனடியாக புதிய சட்டம் இயற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






