காயாமொழி சி.பா. ஆதித்தனார் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

காயாமொழி சி.பா. ஆதித்தனார் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பழைய மாணவர் சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
Published on

காயாமொழி சி.பா. ஆதித்தனார் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழைய மாணவர்கள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளனர்.

ஆக்கிரமிப்பு

காயாமொழி சி.பா. ஆதித்தனார் அரசு மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர்கள் சங்க செயலாளர் செல்வக்குமார் தலைமையில் பழைய மாணவர்கள், கலெக்டர் செந்தில்ராஜிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், காயாமொழி பஞ்சாயத்தில் 1957-ம் ஆண்டு முதல் சி.பா. ஆதித்தனார் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கப்பட்ட நம்ம ஸ்கூல் திட்டத்தின் மூலம் பழைய மாணவர்களை ஒருங்கிணைத்து பள்ளிக்க தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருகிறோம். பள்ளி விளையாட்டு மைதானத்தை பராமரித்து வருகிறோம். சிவந்தி ஆதித்தனார் கிரிக்கெட் கிளப் சார்பில் ஆண்டு தோறும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறோம். இந்த பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் பல ஆண்டுகளாக தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் குப்பை கொட்டவும், பராமரிப்பு இல்லாத மண்புழு தயாரிப்பு கொட்டகையாலும், பழுதடைந்த குப்பை தரம் பிரித்தல் கூடமும் ஆக்கிரமித்து உள்ளன. பள்ளிக்கூட இடத்தில் சிலருக்கு வீட்டுத்தீர்வையும் வழங்கப்பட்டு உள்ளது. ஆகையால் பள்ளி விளையாட்டு மைதானத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேரூராட்சி 15-வது வார்டு கணேசபுரத்தை சேர்ந்த காட்டுநாயக்கன் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் மற்றும் மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், ஏரல் கணேசபுரத்தில் காட்டுநாயக்கன் சமுதாயத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். சாதி சான்றிதழ் கிடைக்காமல் மாணவர்கள் மேல்படிப்பு படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதுவரை பல முறை மனு அளித்தும் எந்த பயனும் இல்லை. எனவே, எங்கள் சமுதாய மாணவர்களுக்கு சாதிச்சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராமணர் சங்கம்

தமிழ்நாடு பிராமணர் சங்கம், தாம்ப்ராஸ் சங்கம், பா.ஜனதா ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு, வீர இந்து பேரமைப்பு ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனித்தனியாக மனு அளித்தனர். அந்த மனுவில், தூத்துக்குடியில் இன்று (செவ்வாய்க்கிழமை) திராவிடர் தமிழர் கட்சி சார்பில் ஆஷ்துரை நினைவு நாளை முன்னிட்டு சனாதன எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான விளம்பர போஸ்டரில் ஆஷ்துரையை சனாதன எதிர்ப்பாளர் எனவும், வாஞ்சிநாதனை பார்ப்பன பயங்கரவாதி எனவும் குறிப்பிட்டு உள்ளனர். இது இந்திய அரசியல் சட்டத்துக்கு விரோதமானதாகும். நாட்டின் விடுதலைக்காக உயுர்நீத்த தியாகியை அவமதிக்கும் செயலாகும். மேலும், தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும். எனவே, இந்த கருத்தரங்கம் நடத்த அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள், மாநில செயலாளர் தா.வசந்தகுமார் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், திருச்செந்தூர் அருகே காயாமொழி சுப்பிரமணியபுரத்தில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் கட்டுவதற்கு சிலர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதியில் நிலவும் சமய ஒற்றுமையை பாதுகாக்க தேவாலயம் கட்டுவதை தடை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.

திருப்பணி

பா.ஜனதா கட்சி ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் ஓம்பிரபு தலைமையில் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்டம் நாணல்காடு சிவகாமி அம்பாள் சமேத திருகண்டீசுவரர் ஆலயம் கோவில் திருப்பணிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்தது. கடந்த ஜனவரி மாதம் அதற்கான நிதியை ஒதுக்கியது. ஆனால் இதுவரை திருப்பணிகள் தொடங்கப்படவில்லை. ஆகையால் உடனடியாக கோவில் திருப்பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

கட்டுமான தொழிலாளர்கள்

சி.ஐ.டி.யு கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இரா.பேச்சிமுத்து, செயலாளர் சொ.மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியமாக மாதம் ரூ.3000 வழங்க வேண்டும். தீபாவளிக்கு பண்டிகை கால போனசாக ரூ.5000 ஒரு மாத காலத்துக்கு முன்பாக வழங்க வேண்டும். விபத்து எங்கு நடந்து இறந்தாலும் ரூ.5 லட்சம் நிவாரணம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பணியின்போது நடைபெறும் விபத்துக்களால் கை, கால் எலும்பு முறிவு ஏற்படும் தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்குவதுடன், கட்டுமான தொழிலாளர்களை தமிழக முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தை சேர்ந்தவர்கள் பேராசிரியை பாத்திமா பாபு தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், போலீஸ் நிலையங்களில் நடைபெறும் சித்ரவதைகளை தடுக்க தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் முழுமையாக செயல்படுவதை மாவட்ட கலெக்டர் உறுதிப்படுத்திட வேண்டும் என்று கூறி உள்ளனர்.

தூத்துக்குடி அருகே உள்ள கீழகூட்டுடன்காடு மற்றும் சுற்றுவட்டார மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், புதுக்கோட்டை 4 வழிச்சாலையில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அங்கிருந்து எங்கள் ஊரான கீழகூட்டுடன்காடு, அய்யப்பநகர், அய்யனார் காலனி, யூகோநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பாதை இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் எங்கள் பகுதிக்கு செல்ல பொதுப்பாதை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

நரிக்குறவர்

கோவில்பட்டி மந்தித் தோப்பு நகரிக்குறவர் சங்க தலைவர் கரியமூர்த்தி தலைமையில் நரிக்குறவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், மந்தித்தோப்பு கிராமத்தில் அரசு மூலம் எங்கள் சமுதாயத்துக்கு ஒதுக்கப்பட்ட நரிக்குறவர் காலனியில் 19 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. தற்போது 8 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வீடு கட்டி உள்ளோம். இந்தநிலையில் எங்கள் இடத்தில் சிலர் ஆக்கிரமித்து குடிசை அமைத்து உள்ளனர். இதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம். ஆகையால் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com