கீழடி அகழாய்வு விவகாரம்: திமுக - அதிமுக மோதல்

கீழடி அகழாய்வுக்கு திமுக அரசு ஒரு ரூபாயை கூட ஒதுக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை,
சென்னை,சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. மேலும், கீழடி நாகரிகம் என்பது கி.மு. 3ஆம் நூற்றாண்டு என நம்பப்படுகிறது. இந்த ஆய்வு தொடர்பாக தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணா, கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய தொல்லியல் துறை இயக்குநரிடம் சமர்ப்பித்தார்.
ஆனால், அமர்நாத் ராமகிருஷ்ணாவின் கீழடி அகழாய்வு ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பிய இந்திய தொல்லியல் துறை, அதில் திருத்தங்களையும் கேட்டுள்ளது. இதன் காரணமாக தமிழர்களின் தொன்மையை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளும் மத்திய அரசுக்கு தங்களது அதிருப்தியையும் கண்டனத்தையும் பதிவு செய்தன.
இதற்கிடையில், அமர்நாத் ராமகிருஷ்ணா, டெல்லியில் உள்ள நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் அலுவலகத்திலிருந்து, நொய்டா அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். இதற்கும் தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இந்தநிலையில், கீழடிக்கு திமுக அரசு ஒரு ரூபாயை கூட ஒதுக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் குற்றம்சாட்டினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அகழ்வாராய்ச்சிக்கு திமுக ஆட்சியில் ரூ.27 கோடி ஒதுக்கப்பட்டதாக திமுக எம்.எல்.எ.ஏ எழிலன் கூறியுள்ளார். இவ்வாறு கீழடி அகழாய்வு விவகாரத்தில் திமுக - அதிமுக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
கீழடி அகழ்வாராய்ச்சியை தொடங்கியது அதிமுகதான். கீழடிக்கு நிதியை ஒதுக்கி பணியை அதிமுக தொடங்கியது. திமுக அரசு 2006 முதல் 2011 வரை ஒரு ரூபாயை கூட ஒதுக்கவில்லை. தமிழகத்தில் நடந்துள்ள 39 அகழ்வாராய்ச்சிகளில் 33 இடங்கள் அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டவை என்று கூறினார்.
கீழடி விவகாரம் குறித்து மாபா.பாண்டியராஜன் பேட்டி அளித்த நிலையில், திமுக எம்.எல்.ஏ. எழிலன் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் கீழடி ஆய்வு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.ரூ.105 கோடி அதிமுக செலவிட்டதாக சொன்னது பொய் தகவல். ரூ.1 கோடிதான் அதிமுக அரசு ஒதுக்கியது. அகழ்வாராய்ச்சிக்கு திமுக ஆட்சியில் ரூ.27 கோடி ஒதுக்கப்பட்டது.
அகழ்வாராய்ச்சி மீண்டும் தொடர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்தே அகழாய்வுக்கு அதிமுக நடவடிக்கை எடுத்தது. அகழ்வாராய்ச்சி பொருட்களை பாதுகாக்க கோர்ட் உத்தரவிட்டதால் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சராக இருந்தபோது ஒருமுறை கூட மாபா.பாண்டியராஜன் கீழடியில் ஆய்வு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.