கீழடி அகழாய்வு அறிக்கை: மதுரையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

கீழடி நாகரிகத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று மதுரை திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா எம்.பி கூறினார்.
மதுரை,
கீழடி ஆய்வறிக்கையை அங்கீகரிக்க மறுத்த மத்திய அரசுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தொன்மையின் சிறப்பிடமாக விளங்கும் கீழடி அகழாய்வு முடிவுகளை மத்திய அரசு ஏற்க மறுத்து கூடுதல் விவரங்களை கேட்டு திருத்த அறிவுறுத்தியுள்ளது.
கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்க மறுக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட மறுக்கும் மத்திய பாஜக அரசின் தமிழர் விரோத போக்கை கண்டித்து மதுரை வீரகனூர் சுற்றுச்சாலையில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா தலைமையில் திமுக மாணவரணி சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மாநில மற்றும் மாவட்ட மாணவரணி நிர்வாகிகள், மாணவர்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்று உள்ளனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருச்சி சிவா, கீழடி நாகரிகத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும். நீ யார் எங்களின் வரலாற்றை மறைப்பதற்கு? என்றார்.






