

ஊட்டி,
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில் அனைத்து மாவட்டங்களிலும் சில தளர்வுகளை அறிவித்து பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
எனினும், டெல்டா பிளஸ் கொரோனா வகை தற்போது சில மாவட்டங்களில் பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்னும் முழுமையாக நீக்கப்படவில்லை. குறிப்பாக சுற்றுலாத்துறை கட்டுப்பாடுகளுடனேயே செயல்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் ஜூலை மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு பல மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த இரு மாநிலங்களிலும் வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் இந்த மாநிலங்களை சேர்ந்த மக்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நீலகிரி மக்கள் பாதுகாப்பினை முன்னிட்டு இ-பாஸ் முறை இன்னும் அமலில் உள்ளது என அம்மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்.