

கேரளம் முதல்-மந்திரி வி.டி.சதீசன் பாக்யராஜ் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய கே. பாக்யராஜ் காலமானார். அவருக்கு வயது 73. உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கேரளம் முதல்-மந்திரி வி.டி.சதீசன் தனது இரங்கலை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எகஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
“திரைக்கதை மன்னன் பாக்யராஜ் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் சினிமா மட்டுமல்லாமல், மலையாள சினிமாவுடனும் அவருக்கு ஒரு சிறப்பான பிணைப்பு உள்ளது. ‘மிஸ்டர் மருமகன்’ திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம், கேரள ரசிகர்களால் இன்றும் நினைவுகூரப்படுகிறது. திரையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள், வருங்கால தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடல் நுங்கம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமான திரையுலகினரும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
தமிழ் திரையுலகுக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் பாக்யராஜ் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இயக்குநர் பாக்கியராஜ் உடல் நாளை மதியம் 1.30 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.