சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு நிறுத்த வேண்டும் - முத்தரசன்

கேரள மாநில அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் முயற்சியில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பான பிரச்சினையில் நடுவர் மன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்புகளை பின்பற்றாமல் கேரள மாநில அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் முயற்சியில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக அமைந்துள்ள சிலந்தி ஆற்றின் குறுக்கே வட்ட வாடா பகுதியில் 120 அடி நீளம், 10 அடி உயரம் கொண்ட தடுப்பணை கட்டுவது தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட குடிநீர் ஆதாரத்திலும் பாசன பரப்பிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என விவசாயிகளும், பொதுமக்களும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசுக்கும், காவிரி நதிநீர் ஆணையத்துக்கும் வழங்காமல், விபரங்களை தெரிவித்து ஒப்புதல் பெறாமல் கேரள அரசு திட்டப் பணிகளை தொடங்கியிருப்பது ஏற்கதக்கதல்ல. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் முதல்-அமைச்சர், கேரள முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதி, திட்டப் பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கையை ஏற்று, தடுப்பணை கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com