முல்லைப் பெரியாற்றில் கேரளா அரசு புதிய அணை கட்டுவது சட்டவிரோதமானது: செல்வப்பெருந்தகை கண்டனம்

புதிய அணையை கட்டவும், பழைய அணையை இடிக்கவும் கேரள அரசு முயற்சிப்பது அப்பட்டமான சட்டவிரோத செயலாகும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாற்றில் கேரளா அரசு புதிய அணை கட்டுவது சட்டவிரோதமானது: செல்வப்பெருந்தகை கண்டனம்
Published on

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை ஆய்வு செய்து தயார் செய்ய கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் கேரள அரசு விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பம் வரும் 28-ம் தேதி மதிப்பீட்டுக் குழுவின் பரிசீலனைக்காக பட்டியலிடப்பட்டு இருப்பதாக வந்திருக்கிற செய்தி தமிழகத்தின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. கேரள அரசின் இத்தகைய முயற்சிகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

கடந்த 2012-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழு, அணை பாதுகாப்பாக இருப்பதாக அறிக்கை சமர்ப்பித்தது. இதையொட்டி 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், தமிழகத்திற்கு பயன்படுகிற வகையில் நீர்மட்டத்தை 142 அடியாக உறுதி செய்து அனுமதி அளித்தது. அதே நேரத்தில், கேரள அரசு இயற்றிய சட்டத்தையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

அணையை பலப்படுத்திய பிறகு 152 அடிவரை நீரை தேக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியதற்கு பிறகும் புதிய அணையை கட்டவும், பழைய அணையை இடிக்கவும் கேரள அரசு முயற்சிப்பது அப்பட்டமான சட்டவிரோத செயலாகவும், நீதிமன்ற அவமதிப்பாகவும் கருத வேண்டியிருக்கிறது. 

முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மையை உச்ச நீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழுவால் உறுதி செய்யப்பட்ட பிறகு, கேரள அரசு இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அதையும் மீறி தமிழக விவசாயிகளை பாதிக்கும் செயல்களில் கேரள அரசு ஈடுபடுமேயானால், உடனடியாக இதை தடுத்து நிறுத்துவதற்கு உச்ச நீதிமன்றத்தை நாடுகின்ற நடவடிக்கைகளை எடுக்கும்படி தமிழக  முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com