தமிழக அரசு மீது கேரளா தவறான குற்றச்சாட்டை வைக்கிறது: முதல்வர் பழனிசாமி விளக்கம்

முல்லைப் பெரியாற்றில் 142 அடி தண்ணீர் இருப்பு வைக்க கூடாது என்பதற்காகவே கேரள அரசு தவறான குற்றச்சாட்டை முன் வைக்கிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மீது கேரளா தவறான குற்றச்சாட்டை வைக்கிறது: முதல்வர் பழனிசாமி விளக்கம்
Published on

திருச்சி,

முக்கொம்பு மேலணையில் வெள்ளத்தில் உடைந்த மதகுகளை முதல் அமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்காததால், வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை. பல்வேறு அணைகளில் இருந்து அதிகளவில் உபரி நீர் வந்ததன் காரணமாக கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது. முல்லைப் பெரியாற்றில் 142 அடி தண்ணீர் இருப்பு வைக்க கூடாது என்பதற்காகவே கேரள அரசு தவறான குற்றச்சாட்டை முன் வைக்கிறது. கேரளாவின் 80 அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்ததற்கும் மணல் குவாரிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதிக அளவில் வெள்ள நீர் வெளியேறியதால், அழுத்தம் காரணமாக பழமையான அணையின் மதகு உடைந்தது. மதகுகள் உடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் உடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணி 4 நாளில் முடியும்.

மணலுக்கு பதில் முழுவதும் எம்.சாண்ட் மூலமாக கட்டடங்கள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கும். திருச்சி முக்கொம்பு மதகுகள் உடைந்த மேலணைக்கு ரூ.325 கோடியில் புதிய கதவணை கட்டப்படும். புதிய கதவணைகள் பணி விரைவில் தொடங்கி 15 மாதங்களில் கட்டி முடிக்கப்படும். ரூ.325 கோடியில் 100 மீட்டர் தள்ளி கொள்ளிடத்தில் புதிய அணை கட்டப்படும் என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com