எடப்பாடி தர்பூசணி பழங்களை வாங்க கேரள வியாபாரிகள் ஆர்வம்

எடப்பாடி தர்பூசணி பழங்களை வாங்க கேரள வியாபாரிகள் ஆர்வம்
Published on

எடப்பாடி:-

எடப்பாடி அடுத்துள்ள காவிரிக்கரை பாசன பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தர்பூசணி பழங்களை அறுவடை செய்யும் பணி தொடங்கியது. இந்த பழங்களை, கேரள வியாபாரிகள் அதிக அளவில் ஆர்வமுடன் கொள்முதல் செய்து வருகின்றனர்.

தர்பூசணி சாகுபடி

எடப்பாடி அடுத்த பில்லுக்குறிச்சி மொரசப்பட்டி, வெள்ளகவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தர்பூசணிகளை சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக இப்பகுதியில் 'ஸ்வீட் குயின்' எனப்படும் சுவை மிகுந்த தர்பூசணி ரகம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் சமீபத்தில் இப்பகுதியில் போதிய அளவில் பருவமழை பெய்தது. குறிப்பாக காவிரி பாசனப்பகுதியில் தர்பூசணி விளைச்சலுக்கு ஏற்ற தட்பவெப்ப சூழல் நிலவியது.

அறுவடை

இதன்காரணமாக தற்போது இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த தர்பூசணி செடிகள் நல்ல விளைச்சல் கண்டுள்ளன. இந்த நிலையில், விவசாயிகள் வழக்கத்தை விட முன்னதாகவே தர்பூசணி பழங்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் விளையும் சுவை மிகுந்த தர்பூசணி பழங்களை, கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்வதற்காக அந்த பகுதி வியாபாரிகள் ஆர்வமுடன் கொள்முதல் செய்து வருகின்றனர்.

ஒரு டன் ரூ.10 ஆயிரம்

ஒரு டன் தர்பூசணி பழம் சுமார் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், மேலும் கோடை காலம் தொடங்கிடும் நிலையில் இதன் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக, இப்பகுதியில் தர்பூசணி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தெரிவித்தனர்.

தற்போதைய நிலையில் 3 முதல் 5 கிலோ எடையுள்ள பழங்கள் தான் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி பார்த்தால் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பழங்கள் கேரள மாநிலத்தில் வியாபாரம் செய்யப்படும் போது, ஒரு பழம் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com