திடீர் பணக்காரர் ஆகும் ஆசையில் தமிழக பெண் நரபலி; கேரள தம்பதி கைது

திடீரென பணக்காரர்களாக ஆகும் ஆசையில், தமிழக பெண் உள்பட 2 பேரை நரபலி கொடுத்த கேரள தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
திடீர் பணக்காரர் ஆகும் ஆசையில் தமிழக பெண் நரபலி; கேரள தம்பதி கைது
Published on

நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

லாட்டரி வியாபாரிகள்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி பகுதியை சேர்ந்தவர் ரோஸ்லின் (வயது 50). லாட்டரி வியாபாரி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து காலடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.

இதேபோல் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் பத்மா (54). இவரது கணவருக்கு உடல்நிலை சரியில்லை. பத்மா மட்டும் எர்ணாகுளம் நகருக்கு வேலை தேடி வந்தார். பின்னர் பொண்ணுரணி பகுதியில் தங்கியிருந்து, லாட்டரி வியாபாரம் செய்து வந்தார். அவரது குடும்பத்தினர் தினமும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். இதற்கிடையே கடந்த 26-ந் தேதி அழைத்த போது, பத்மா செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இடைத்தரகரிடம் விசாரணை

இதனால் அவரது மகன் செல்வன் எர்ணாகுளத்துக்கு வந்து, தனது தாயை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால், அவரை காணவில்லை. இதுகுறித்து கடவந்தரா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மர்மமான முறையில் 2 பெண்கள் காணாமல் போனது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். பத்மாவின் செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். அதில், பத்தினம்திட்டா திருவல்லா பகுதியில் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு நபருடன் பத்மா ஒரு காரில் சென்றது தெரியவந்தது. அந்த நபரை பிடித்து விசாரித்த போது பெரும்பாவூரை சேர்ந்த முகமது ஷாபி என்ற ஷிகாப்பு (48) என்பது தெரியவந்தது. அந்த நபரை பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

நரபலி

திருவல்லா அருகே இலந்தூர் பகுதியை சேர்ந்த வைத்தியர் பகவந்த் (55). இவரது மனைவி லைலா (52). இதற்கிடையே பகவந்துக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பணம் சம்பாதிக்கும் ஆசையில் இருந்தார். அப்போது முகமது ஷாபியின் அறிமுகம் ஏற்பட்டது. அவர் பெரும்பாவூரில் தனக்கு தெரிந்த சாமியார் ஒருவர் இருப்பதாகவும், அவரிடம் பூஜை செய்தால் குடும்பத்தில் செல்வ செழிப்பும், மேன்மையும் ஏற்படும் என்று கூறியுள்ளார். இதற்கு நரபலி கொடுக்க வேண்டும் என்றும் முகமது ஷாபி கூறினார். இதற்காக ரூ.10 லட்சம் முன்பணமாக பெற்றுக்கொண்ட அவர், நரபலி கொடுக்க பெண்ணை தேடி வந்தார். அப்போது ரோஸ்லினை சந்தித்து சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி தம்பதி வீட்டுக்கு கடத்தி சென்றார்.

அவரை அங்கு கட்டி வைத்து, தலையில் சுத்தியலால் அடித்தும், கழுத்தை கத்தியால் அறுத்தும் நரபலி கொடுத்தனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து வீட்டுக்கு பின்புறம் குழிதோண்டி உடலை துண்டு, துண்டாக வெட்டி புதைத்தனர். அதன் பின்னரும் தம்பதி வீட்டுக்கு ஐஸ்வர்யம் கிடைக்கவில்லை.

உடலை துண்டாக்கி புதைத்தனர்

இதுகுறித்து தம்பதி முகமது ஷாபியிடம் கேட்டபோது, மேலும் ஒரு நரபலி கொடுக்க வேண்டும் என்றார். இதை நம்பிய தம்பதி மேலும் ரூ.10 லட்சம் கொடுத்து உள்ளனர்.

இதையடுத்து முகமது ஷாபி பத்மாவை சந்தித்து சினிமாவில் நடிக்க வைப்பதாகவும், பல லட்சம் தருகிறேன் என்றும் கூறி தம்பதி வீட்டுக்கு கடத்தி சென்றார். பின்னர் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, உடலை, துண்டு, துண்டாக்கி புதைத்தது தெரியவந்தது.

3 பேர் கைது

வாழ்க்கையில் திடீர் பணக்காரர்களாக ஆக ஆசைப்பட்டு 2 பெண்களை நரபலி கொடுத்த பகவந்த், லைலா மற்றும் இடைத்தரகர் முகம்மது ஷாபி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து திருவல்லாவில் புதைக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை வெளியே எடுத்து, அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com