

சென்னை,
சைபர் அடிமைதனம் மற்றும் வேலைவாய்ப்பு மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரில் இந்திய இளைஞர்களை ஏமாற்றி, கம்போடியா, வியட்நாம் மற்றும் லாவோஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பி, அங்கு இணையவழி மோசடி (Cyber Scam) நிறுவனங்களில் சைபர் அடிமைகளாக கட்டாயப்படுத்தி பணியமர்தப்பட்டது தொடர்பாக இந்திய அரசு மற்றும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) மேற்கொண்ட நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வாறு மீட்க்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் சி.பி.சி.ஐ.டியில் 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கம்போடியாவில் இருந்து மீட்கப்பட்ட நபர்களில் வெற்றிவேல் (த/பெ. செல்வகுமார்), வயது 48, அழகரசன் நகர், 2-வது தெரு, நாகை ரோடு, தஞ்சாவூர் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், தஞ்சாவூர் சி.பி.சி.ஐ.டி. குற்ற எண் 05/2024, ச/பி 120(B), 420, 368, 371 இதச மற்றும் பிரிவு 10 இந்திய குடியேற்றச் சட்டம், 1983 ன் படி கடந்த 10.08.2024 ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் சுந்தர் (எ) சுந்தராஜூலு என்பவர் 03.10.2024 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இவர் தஞ்சாவூரை சேர்ந்த ஆறு நபர்களிடம் கம்போடியாவில் கால் சென்டர் வேலை என்றும் அதிக சம்பளம் கிடைக்கும் என்றும் நம்ப வைத்து வேலைக்கு சேர்ப்பதற்கென்று லட்சகணக்கில் புகார்தாரர் உட்பட ஐந்து நபர்களிடம் பணம் பெற்றும் மலேசியாவில் வசித்து வரும் தேனி மாவட்டம் பந்துவார்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெய் (எ) பாபு (த/பெ. காளியப்பன்) என்பவர் மூலம் விமான டிக்கெட் மற்றும் மற்ற ஏற்பாடுகளை செய்து தாய்லாந்து மூலம் கம்போடியாவிற்கு மேற்படி 6 நபர்களையும் அனுப்பியுள்ளார் என தெரிய வந்தது.
இந்த வழக்கில் ஜெய் (எ) பாபு கம்போடியாவிற்கு இணையதள மோசடி வேலைகள் செய்வதற்கு சைபர் அடிமைகளாக அனுப்பும் குற்ற செயல்களில் முக்கிய ஆட்சேர்ப்பு முகவராக செயல்பட்டுள்ளார் என்பதும் இவர் கம்போடியாவில் உள்ள ஏஜென்டுகளுடன் நேரடி தொடர்பில் இருந்து சுந்தர் அனுப்பிய மேற்படி ஆறு நபர்களையும் கம்போடியாவில் உள்ள "பாவெட்" (Pavet) என்ற நகரத்தில் உள்ள இணையதள மோசடி மையங்களில் (cybercrime compound) சைபர் அடிமைகளாக விற்று அதற்காக கம்போடியா முகவர்களிடம் பணம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு விற்கப்பட்டவர்களை கம்போடியா cybercrime compound-ல் உள்ள ஏஜென்டுகள் போலியாக உருவாக்கிய பிட்காயின் முதலீட்டு செயலிகளில் பொதுமக்களிடம் இணையவழி மோசடி செய்ய கட்டாயப்படுத்தும் வேலையை செய்யவைத்து வற்புறுத்தியுள்ளனர். அவர்களது கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வெளியேற முடியாமல் தடுத்து வைக்கப்பட்டதும் அவர்கள் வேலை செய்ய மறுத்தபோது உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதும் தெரியவந்தது.
மேற்படி இருவர் மீது வழக்கு விசாரணை முடித்து ஜெய் தலைமறைவானதாக நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் இவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிந்திருந்த நிலையில் ஜெய் மலேசியா நாட்டில் இருந்ததால் இவர் மீது Lookout Circular பிறப்பிக்க சி.பி.சி.ஐ.டியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேற்படி ஜெய் (எ) பாபு என்பவர் 16.07.2026 ஆம் தேதி மலேசியாவில் இருந்து பாங்காங் வழியாக இந்தியாவின் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தபோது அவர் தஞ்சாவூர் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது உரிய சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.