சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை பாதுகாப்பாக மீட்பு

சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை பாதுகாப்பாக மீட்பு
Published on

சேலம்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்த தங்கதுரை-வெண்ணிலா தம்பதிக்கு 5 வயதில் ரித்விக் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான வெண்ணிலா பிரசவத்திற்காக கடந்த 5-ந் தேதி சேலம்அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அன்று இரவே அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாய் மற்றும் குழந்தையை தங்கதுரை மற்றும் அவருடைய மாமியார் இந்திரா ஆகியோர் கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை தங்கதுரை அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நேரத்தில் பிரசவ வார்டுக்கு வந்த 30 வயது பெண் ஒருவர் இந்திராவிடம் நைசாக பேச்சு கொடுத்து, குழந்தையின் கண்கள் மஞ்சளாக இருப்பதால் மஞ்சள் காமாலை நோய் தாக்கி இருக்கலாம் என்று கூறினார். மேலும் அவர் குழந்தையை கண் மருத்துவரிடம் சென்று காண்பித்து வரலாம் என்று இந்திராவை அழைத்தார்.

இதை உண்மை என நம்பி இந்திரா, அந்த பெண்ணுடன் குழந்தையை தூக்கி கொண்டு சென்றார். பின்னர் இருவரும் கண் டாக்டரிடம் குழந்தையை காண்பித்துள்ளனர். இதையடுத்து அந்த பெண், இந்திராவிடம் நான் குழந்தையை வைத்து கொள்கிறேன் நீங்கள் சென்று மருந்து வாங்கி கொண்டு வாருங்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தையை இந்திரா அந்த பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு மருந்து வாங்க சென்றார்.

சிறிது நேரம் கழித்து இந்திரா மருந்து வாங்கி விட்டு திரும்பி வந்து பார்த்த போது அந்த பெண்ணை அங்கு காணவில்லை. குழந்தையுடன் அந்த பெண் மாயமானதை கண்டு, இந்திரா அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை காவல் நிலையத்தில் இந்திரா மற்றும் அவரது உறவினர்கள் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்ததில் முகக்கவசம் அணிந்த பெண் ஒருவர் குழந்தையை தூக்கி கொண்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடினர். அங்குள்ள பேருந்து நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தேடினர்.

இந்த நிலையில் இரவு முழுவதும் தொடர்ந்த தேடுதல் வேட்டையை அடுத்து குழந்தையை கடத்திய வினோதினி என்ற பெண்ணை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து வினோதினியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதற்காக அவர் குழந்தையை கடத்தினார்? அவருக்கு குழந்தை கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com