திருச்செந்தூரில் கடத்தப்பட்ட 1½ வயது குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் கடத்தப்பட்ட 1½ வயது ஆண் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருச்செந்தூரில் கடத்தப்பட்ட 1½ வயது குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு
Published on

1 வயது குழந்தை கடத்தல்

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளபுரத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 32). இவரது மனைவி ரதி. இவர்களது 1 வயது ஆண் குழந்தை ஸ்ரீஹரிஸ். இவர்கள் 3 பேரும் கடந்த 28-ந் தேதி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்தனர். அப்போது அவர்களுடன் ஒரு பெண்ணும், ஆணும் பேசி பழகி வந்துள்ளனர்.

கடந்த 5-ந் தேதி காலையில் முத்துராஜ் தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தனர். அவர்களுடன் அந்த பெண்ணும், ஆணும் வந்தனர். கோவில் வளாகத்தில் குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுப்பதாக கூறி அந்த பெண், ஆணும் குழந்தையை கடத்திச் சென்றனர். இதுகுறித்து ரதி கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.

போலீசார் மீட்டனர்

குழந்தையை கடத்தியவர்கள் கோவை மாவட்டம் ஆலாந்துறை பகுதியில் இருப்பதாக திருச்செந்தூர் போலீசுக்கு வந்த தகவலையடுத்து, ஆலாந்துறை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக செயல்பட்டு குழந்தையை கடத்தியதாக சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த பாண்டியன் (45), திலகவதி (40) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் குழந்தை ஆத்தூரில் பாண்டியன் என்பவர் வீட்டில் இருந்தது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் குழந்தையை மீட்டனர். இதற்கிடையே போலீஸ் நிலையத்தில் திலகவதி திடீரென்று இறந்துவிட்டார்.

பெற்றோரிடம் ஒப்படைப்பு

இந்த நிலையில் குழந்தையை திருச்செந்தூர் கோவில் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் நேற்று கொண்டு வந்தனர். பின்னர் முத்துராஜ்-ரதி தம்பதியிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் தனிப்படை போலீசார் குழந்தை ஸ்ரீஹரிசை ஒப்படைத்தனர். அப்போது பெற்றோர் கண்ணீர் மல்க குழந்தையை கட்டித்தழுவி கொஞ்சினார்கள். போலீசாருக்கு கைக்கூப்பி நன்றி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com