

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருகே ஆதியாக்குறிச்சியைச் சேர்ந்த செல்வா (வயது 27) என்பவரும், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்து கடந்த 15-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து ஏற்கனவே நடந்த போலீஸ் விசாரணையில், அந்தப் பெண் தனது விருப்பப்படியே கணவருடன் செல்வதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த இளம்பெண்ணின் வீட்டிற்குச் சென்ற அவரது இரண்டு சகோதரர்கள் மற்றும் உறவினர் ஒருவர், பெண்ணிடம் நைசாகப் பேசி அவரை வலுக்கட்டாயமாகக் காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, நெல்லையில் இருந்த அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர்.
கடத்தலில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர்கள் மற்றும் உறவினர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட பெண் அவரது கணவரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார்.