

சென்னை,
தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் சென்னை, திருவொற்றியூர், நல்ல தண்ணீர் ஓடை குப்பம் திட்ட பகுதியில் ரூ.58 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 480 அடுக்குமாடி குடியிருப்புகளை சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
மேலும் சென்னை கோயம்பேட்டில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.105 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு அலுவலகக் கட்டிடம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.10 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபம் மற்றும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் ரூ.399 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4,748 அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றையும் அவர் திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மணலூர், கொந்தகை மற்றும் அகரம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் மேற்கொள்ளவுள்ள 6-ம் கட்ட தொல்லியல் அகழாய்வு பணிகளை காணொலிக்காட்சி மூலமாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மீன்வளத்துறையின் கீழ், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் சார்பில் நாகை, ராமநாதபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூ.27 கோடியே 65 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார்.