20 அடி உயர மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

பொன்னமராவதி அருகே 20 அடி உயர மேம்பாலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
20 அடி உயர மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
Published on

பொன்னமராவதி,

பொங்கல் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சிவந்திலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 57), கொத்தனார். இவருடைய மகன் பாஸ்கர் (23). இவர் துபாயில் வேலை பார்த்து வந்தார். பொங்கல் விடுமுறைக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்துள்ளார்.

நேற்று முன்தினம் பாஸ்கர் தனது மோட்டார் சைக்கிளில் பொன்னமராவதிக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிங்காரம் தனது மகனை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

வாலிபர் பலி

இந்தநிலையில் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் பஸ்நிறுத்தம் அருகே உள்ள 20 அடி உயர மேம்பாலத்தில் இருந்து வாலிபர் ஒருவர் தவறி விழுந்து இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதன்பேரில் பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தடுப்பு சுவரில் மோதியது

விசாரணையில் இறந்து கிடந்தது பாஸ்கர் என்பது தெரியவந்தது. மேலும், இவர் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிர்பாராதவிதமாக தடுப்பு சுவரில் மோதி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்துள்ளார். இரவு நேரம் என்பதால் அவர் விபத்தில் சிக்கியது யாருக்கும் தெரியவில்லை.

இதில், பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. பாஸ்கரின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இந்த சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com