திருப்பூரில்.. விரைவில் செயல்பாட்டுக்கு வரும் பின்னலாடை வாரியம்

பின்னலாடைத்துறையில் புதிய ரகங்களை ஊக்குவித்து உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் வசதிகளை வழங்க உள்ளது.
திருப்பூரில்.. விரைவில் செயல்பாட்டுக்கு வரும் பின்னலாடை வாரியம்
Published on: 

திருப்பூர்,

இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் திருப்பூர் முக்கிய நகரமாக விளங்கி வருகிறது. பனியன் தொழில்துறையின் வளர்ச்சிக்கு பின்னலாடை வாரியம் அமைக்க வேண்டும் என்று தொழில்துறையினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

பின்னலாடை வாரியம்

இதைக்கருத்தில் கொண்டு பின்னலாடை வாரியம் அமைப்பதற்கான அறிவிப்பை கடந்த பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்தது. மேலும் பின்னலாடை வாரியம் அமைப்பதற்கான அரசாணையை அரசு வெளியிட்டது.

பின்னலாடை தொழிலை வலுப்படுத்தவும், தொழில்துறை ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும், ஏற்றுமதி போட்டித்திறனை அதிகரிக்கவும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும், பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு பின்னலாடை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

பின்னலாடைத்துறையில் நவீனமயமாக்கல், தொழில்நுட்ப மேம்பாட்டுக்கும் இந்த வாரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தை வாய்ப்புகளை மேம்படுத்துவதுடன் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

ஏற்றுமதியை மேம்படுத்த...

பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, பின்னலாடை தொழில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், ஜவுளி மற்றும் பின்னலாடை சங்கங்களிடையே ஒருங்கிணைப்பு, புத்தாக்கம், வர்த்தக முத்திரை, உலகளாவிய போட்டித்திறன் மேம்பாடு, ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகளுக்கு உதவும் பணிகளை இந்த வாரியம் மேற்கொள்ள இருக்கிறது.

மேலும் பின்னலாடை துறையின் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும், பின்னலாடை பூங்காக்கள், தொழிலாளர் நல வசதிகள் மற்றும் பொதுவான ஆராய்ச்சி மையங்கள் அமைக்க வழிவகை செய்யும். ஒரு பிரத்யேக பிராண்டை முன்னிறுத்தி வர்த்தக கண்காட்சிகள், வாங்குவோர்-விற்போர் சந்திப்புகளை ஏற்பாடு செய்வது, ஏற்றுமதியை மேம்படுத்த சர்வதேச ஒத்துழைப்புகளை எளிதாக்கும் பணியை செய்ய இருக்கிறது. பின்னலாடைத்துறையில் புதிய ரகங்களை ஊக்குவித்து உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் வசதிகளை வழங்க உள்ளது.

வாரிய பிரதிநிதிகள்

இந்த வாரியத்தின் பிரதிநிதிகளாக ஒரு தலைவர், ஒரு உறுப்பினர் செயலாளர், 2 துணைத்தலைவர்கள், 7 இயக்குனர்கள், 2 கவுரவ உறுப்பினர்கள் இடம்பெற உள்ளனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

துணைத் தலைவர்களாக தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் (சைமா), திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தை (டீமா) சேர்ந்தவர்களும், வாரிய இயக்குனர்களாக பின்னல் துணி உற்பத்தியாளர்கள் சங்கம் (நிட்மா), திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை தொழில் வளாகம், திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம், தென்னிந்திய இறக்குமதி எந்திர பின்னல் துணி உற்பத்தியாளர்கள் சங்கம் (சிம்கா), திருப்பூர் ஏற்றுமதி நிட் பிரிண்டர்ஸ் சங்கம் (டெக்பா), திருப்பூர் கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரி அசோசியேசன், அனைத்து ஜவுளி ஏற்றுமதி முகமைகள் கூட்டமைப்பை (அபாட்) சேர்ந்தவர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

கவுரவ உறுப்பினர்களாக ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.), தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகத்தை (சிட்ரா) சேர்ந்தவர்களும் நியமிக்கப்படுகிறார்கள். பின்னலாடை வாரிய அலுவலகம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கட்டிடம் அல்லது பொது இடங்களில் உள்ள அரசு அலுவலக கட்டிடத்தில் செயல்படுவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

X