

சென்னை,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி மற்றும் விடுதிகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மூலம் தற்போதைய மாணவருக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முன்னேற்றம் பற்றி வழிகாட்டல் வழங்குவதற்கு "அறிவுப் பாலம் திட்டம்" செயல்படுத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள 98 ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 44 பழங்குடியினர் நல மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேவைப்படும் உயர்கல்வி, போட்டித் தேர்வுகள், வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதல்கள், தொழில் முனைவோர் வாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாடு தொடர்பான வழிகாட்டுதல்களை அதே பள்ளியில் பயின்று தற்போது பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ள முன்னாள் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் செய்தொழில் அனுபவங்களை தற்போதைய மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் “அறிவு பாலம் திட்டம்” செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்களின் ஒருங்கிணைப்புடன், தங்களால் இயன்ற அளவு குறைந்தபட்சம் ஆண்டிற்கு 4 முறை பள்ளிக்கு நேரில் வருகை புரிந்து மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டுதல் (Career Guidance) வழங்கவும், மேலும் இணையவழி காணொலி கூட்டம் (Video Conference) வாயிலாக தொடர்ச்சியாக மாணவர்களின் உயர்கல்வி மற்றும் எதிர்காலத் தொழில் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு வழங்குதல் வேண்டும்.
இத்திட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ள அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள், தங்களின் தற்போதைய நிலை (கல்வி, வேலைவாய்ப்பு) தகுதி விவரங்கள் மற்றும் உரிய படிவத்தை https://tnadwservices.in/arivupaalam/public/ என்ற இணையதளத்தில் 09.12.2026 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்திட்டம் பற்றிய முழு தகவல்களுக்கு https://www.tnadw.tn.gov.in/ என்ற இணையதளத்தை அணுகவும் மற்றும் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்: சிவக்குமார்(7338801294) / சுப்ரமணியன்(9443926566)
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.