

கொடைக்கானல்,
கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டெருமை அதிக அளவில் உள்ளன. இவை அவ்வப்போது நகர்ப்பகுதிக்குள் நுழைந்து குடியிருப்பு பகுதிகளில் முகாமிடுவதும், பொதுமக்களை அச்சுறுத்துவதும் வாடிக்கையாக உள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை ஒன்று, கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதி வளாகத்திற்குள் புகுந்தது. காட்டெருமையை பார்த்ததும், அங்கிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் விடுதி ஊழியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர்.
இதற்கிடையே காட்டெருமை விடுதியின் புல்வெளி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த மேஜை மற்றும் நாற்காலிகளை தனது கொம்புகளால் முட்டி, தூக்கிவீசி சேதப்படுத்தியது. அதன்பிறகு அங்கிருந்து வனப்பகுதிக்குள் காட்டெருமை சென்றுவிட்டது. தங்கும் விடுதிக்குள் புகுந்து காட்டெருமை அட்டகாசம் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோல் நேற்று காலை காட்டெருமை ஒன்று ஏரிச்சாலையில் உலா வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து, தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்தினர். இதற்கிடையே அங்கு ரோந்து வந்த வனவர்கள் மதியழகன், ஜெயசுந்தர் ஆகியோர், காட்டெருமையை அருகில் உள்ள தனியார் தோட்டத்துக்குள் விரட்டினர்.