கோடநாடு விவகாரம் : நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனரா? - இன்று சபாநாயகர் விளக்கம்

கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்டசபை கூட்டத்தில் இரண்டாவது நாளாக இன்று அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை.
கோடநாடு விவகாரம் : நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனரா? - இன்று சபாநாயகர் விளக்கம்
Published on

சென்னை:

2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான 4 ம் நாள் விவாதம் மற்றும் பதிலுரை இன்று நடைபெற்று வருகிறது.

நேற்று சட்டசபை கூட்டத்தில் கோடநாடு விவகாரத்தில் சபையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் பொய் வழக்கு போடுவதாக கோஷம் எழுப்பி சட்டசபை வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரு நாட்களுக்கு பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் எனவும் தெரிவித்து இருந்தனர். இன்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபை நடவடிக்கையில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், இன்று சட்டசபை கூட்டம் தொடங்கியதும் சபை முன்னவர் துரைமுருகன்,எழுந்து நேற்று நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக ஊடகங்களில் சில செய்திகள் வெளியாகியிருக்கிறது. இது குறித்து பேரவையில் எடுத்துரைக்க இருப்பதாக கூறினார். அவர் கூறியதாவது:-

செய்தித்தாள்களில் சட்டசபையில் கூச்சல், குழப்பம். அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம் என்ற செய்தி வந்துள்ளது. இது தவறான செய்தி. அ.தி.மு.க.வினர் வெளியேற்றப்படவில்லை. இது குறித்தான செய்தி வெளியிடும் போது பத்திரிகையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-

ஜனநாயக முறையில் பேரவை நடைபெற வேண்டும் என்ற கொள்கை கொண்டவர் முதல்-அமைச்சர். மக்களுக்கான பிரச்சினைகளை பேச வேண்டிய அவையில் தனிப்பட்ட பிரச்சசினைகளை எழுப்பக்கூடாது. இருப்பினும் சபையில் பேச அனுமதித்தேன்; ஆனால் என் அனுமதி பெறாமல் அ.தி.மு.க.வினர் பதாகைகளை ஏந்தி கூச்சலிட்டனர்.

தொடர்ந்து கூச்சல் எழுப்பிவிட்டு அவர்களாகவே வெளிநடப்பு செய்தனர். சட்டசபையில் வெளிநடப்பு செய்த அ.தி.மு.க.வினர், பேரவை வளாகத்தில் போராட்டம் நடத்த முற்பட்டனர். இதன் காரணமாகவே அங்குள்ளவர்களை அவை காவலர்கள் மூலமாக வெளியேற்றுமாறு தெரிவித்தேன்.

நேற்று நடந்த சம்பவத்தை பொறுத்தவரையில் அ.தி.மு.க.வினர் கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு அவர்களாவே வெளிநடப்பு செய்தனர்.இனி வரும் காலங்களில் ஊடகங்கள், பத்திரிகைகள் செய்திகளை கவனமாக கையாள வேண்டும் என்றும் அப்பாவு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com