கொடநாடு வழக்கு: சிபிசிஐடி அலுவலகத்தில் சுதாகரன் ஆஜர்


கொடநாடு வழக்கு: சிபிசிஐடி அலுவலகத்தில் சுதாகரன் ஆஜர்
x
தினத்தந்தி 27 March 2025 1:34 PM IST (Updated: 27 March 2025 2:12 PM IST)
t-max-icont-min-icon

மீண்டும் ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி போலீசார் கூறவில்லை என்று சுதாகரன் கூறினார்.

கோவை,

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். பின்னர் அங்கு நுழைந்தவர்கள் எஸ்டேட்டில் இருந்த பொருள்களை கொள்ளை அடித்து விட்டுத் தப்பிச் சென்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து கேரளத்தைச் சேர்ந்த மனோஜ், சயான், சதீசன், சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி உள்பட 10 பேரைக் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் மூலம் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி போலீசார், வழக்குத் தொடர்பாக இதுவரை 500-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற்றனர்.

மேலும், இதுவரை 250-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி, அவர்கள் கூறும் பதிலை வீடியோவில் பதிவு செய்து உள்ளனர். இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனும், சசிகலாவின் உறவினருமான சுதாகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தநிலையில், சுதாகரன் கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் மதுரை ஐகோர்ட்டு மூத்த வழக்குரைஞர் மாரியப்பன் உடன் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் சுமார் 1 1-2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு பின் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

சிபிசிஐடி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன். விசாரணை முடிந்தது. கொடநாடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன்.சிபிசிஐடி போலீசார் என்னிடம் 40 கேள்விகள் கேட்டனர், எனக்கு தெரிந்த உண்மைகளை தெரிவித்துள்ளேன். மீண்டும் ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி போலீசார் கூறவில்லை .என்றார்.

1 More update

Next Story