கோடநாடு சம்பவத்தை கூலிப்படையினர் செய்தனர்; திமுக நாடகம் - முதல்-அமைச்சர் பழனிசாமி

கோடநாடு சம்பவத்தை கூலிப்படையினர் செய்தனர் என முதல்-அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
கோடநாடு சம்பவத்தை கூலிப்படையினர் செய்தனர்; திமுக நாடகம் - முதல்-அமைச்சர் பழனிசாமி
Published on

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி கொள்ளை சம்பவம் அரங்கேறியது. வீட்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவன் ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஷயான், மனோஜ் உள்ளிட்டோர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த நிலையில் கோடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி, ஷயான், மனோஜ் மற்றும் தெகல்கா புலனாய்வு பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த 11-ந் தேதி டெல்லியில் வீடியோ வெளியிட்டனர். என் மீதான குற்றச்சாட்டில் துளி அளவும் உண்மை இல்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்தார். சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தப்பட்டது.

சென்னை காட்டுப்பாக்கத்தில் நடைபெறும் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். பல தலைவர்களின் பிறந்தநாளை பார்த்துள்ளோம், சிலர் உண்டியல் வைப்பார்கள், சிலர் எடைக்கு எடை பணம் கேட்பார்கள், இவர்களுக்கு மத்தியில் வித்தியாசமாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். மக்களுக்கு கொடுத்து கொடுத்து அவர்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர் எம்.ஜி.ஆர். காலத்தால் அழிக்க முடியாத திட்டங்களை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் 51 லட்சம் குழந்தைகள் சத்துணவு திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர். எதற்கும் அஞ்சமாட்டேன், இறுதி சொட்டு ரத்தம் உள்ளவரை அதிமுகவிற்கு விஸ்வாசமாக இருப்பேன் என்றார்.

கோடநாடு விவகாரம் தொடர்பாக பேசுகையில், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கோடநாடு தனியார் கட்டுப்பாட்டில் உள்ளது. கோடநாடு சம்பவம் கூலிப்படையால் செய்யப்பட்டது. ஆதாரம் இருந்தால் எங்களை சசிகலா குடும்பத்தினர் சும்மா விடுவார்களா? கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுக உள்ளது. சயான், மனோஜை ஜாமீனில் எடுத்தது திமுக தான்.

தெகல்கா முன்னாள் ஆசிரியரின் பேட்டி திமுகவால் செய்யப்பட்ட நாடகம். வாலையாறு பகுதியை சேர்ந்த மனோஜ் மீது கேரளாவில் கொலை வழக்கு உள்ளது. கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கோடநாடு விவகாரத்தில் திட்டமிட்டு திமுக நடத்தும் நாடகத்தை சட்டப்படி தவிடு பொடியாக்கி காட்டுவேன். ரூ.1000 பொங்கல் பரிசு கொடுத்ததால் பொறுக்க முடியாமல் பொய் வழக்குகளை ஜோடிக்கின்றனர் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com