கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 25-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 25-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பங்களாவில் கடந்த 2017ல் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை கடந்த 2022ல் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. 2022 லிருந்து சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில் இதுவரை 250 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மாவட்ட நீதிபதி முரளிதரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜித்தின் ஜாய் நேரில் ஆஜரானார். அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். மேலும், சிபிசிஐடி., ஏடிஎஸ்பி., முருகவேல் தலைமையில் போலீசாரும் ஆஜராகினர்.
வழக்கு தொடர்பாக தற்போது சாட்சிகளிடம் விசாரித்து வருவது குறித்து நீதிபதியிடம் அரசு தரப்பு வக்கீல்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் மாதம் 25-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.






