கோடநாடு கொள்ளை வழக்கு: அ.தி.மு.க. நிர்வாகியிடம் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகி, சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
கோடநாடு கொள்ளை வழக்கு: அ.தி.மு.க. நிர்வாகியிடம் விசாரணை
Published on

கோவை,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. தனிப்படை போலீசார் 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து கோடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் துணை கமிஷனர், விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கட்டங்களாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அ.தி.மு.க. நிர்வாகி சஜீவன், தனக்கு அனுப்பிய சம்மனை ஏற்று காந்திபுரம் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.

அ.தி.மு.க. வர்த்தகர் அணி மாநில செயலாளராக இருப்பவர் சஜீவன். இவர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது கோடநாடு பங்களாவில் மர வேலைகளை கவனித்து வந்தார். இந்த சூழலில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்குமாறு சஜீவன் கூறியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோடநாடு வழக்கு விசாரணைக்காக கடந்த நவ.5ம் தேதி ஆஜராகுமாறு சஜீவனுக்கு சம்மன் தரப்பட்ட நிலையில், துபாய் சென்றதால் தற்போது அவர் ஆஜராகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com