கோடநாடு விவகாரம்: கைதான ஷயான், மனோஜ் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் இருநபர் உத்தரவாதம் அளித்ததால் விடுவிப்பு

கோடநாடு விவகாரத்தில் கைதான ஷயான், மனோஜ் ஆகியோர் எழும்பூர் கோர்ட்டில் நேற்று ஆஜராகினர். தலா 2 பேர் கோர்ட்டில் ஆஜராகி உத்தரவாதம் அளித்ததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கோடநாடு விவகாரம்: கைதான ஷயான், மனோஜ் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் இருநபர் உத்தரவாதம் அளித்ததால் விடுவிப்பு
Published on

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி கொள்ளை சம்பவம் அரங்கேறியது. வீட்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவன் ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஷயான், மனோஜ் உள்ளிட்டோர் ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்தநிலையில் கோடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி, ஷயான், மனோஜ் மற்றும் தெகல்கா புலனாய்வு பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த 11-ந் தேதி டெல்லியில் வீடியோ வெளியிட்டனர்.

இதுதொடர்பாக அ.தி.மு.க. சார்பில் அளித்த புகாரின் பேரில் அவர்கள் இருவரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் டெல்லி சென்று கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர், கடந்த 14-ந் தேதி அவர்களை எழும்பூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

அவர்களை சிறையில் அடைக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி சிறைக்கு அனுப்ப நீதிபதி மறுத்து விட்டார். அதேவேளையில் அவர்கள் இருவரும் 18-ந் தேதி(அதாவது நேற்று) எழும்பூர் கோர்ட்டில் ஆஜராகி தங்களுக்காக தலா இரு நபர்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, ஷயான், மனோஜ் ஆகியோர் எழும்பூர் கோர்ட்டில் நீதிபதி மலர்விழி முன்பு நேற்று காலை 10.30 மணிக்கு ஆஜராகினர். அவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் பிரபாகரன், ஷயான் உள்ளிட்ட இருவருக்காக தலா இரு நபர்கள் உத்தரவாதம் அளிக்க ஒரு வாரம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, மாலை 5.45 மணிக்குள் இருநபர் உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து, ஷயானுக்காக கிண்டியை சேர்ந்த சுந்தர்ராஜன், மோகன்குமார் ஆகியோரும், மனோஜுக்காக கதிர்வேலு, ராஜா ஆகியோரும் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து உத்தரவாதம் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து ஷயான் உள்ளிட்ட இருவரையும் நீதிபதி விடுவித்தார். இதன்பின்பு, மாலை 4 மணிக்கு அவர்கள் இருவரும் கோர்ட்டில் இருந்து வெளியேறி தங்களது வக்கீலுடன் காரில் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com