கோடநாடு விவகாரம்; முதல் அமைச்சர் பழனிசாமி, ஸ்டாலின் பேச சென்னை உயர் நீதிமன்றம் தடை

கோடநாடு விவகாரம் பற்றி முதல் அமைச்சர் பழனிசாமி, மு.க. ஸ்டாலின் ஆகிய இருவரும் பேச கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
கோடநாடு விவகாரம்; முதல் அமைச்சர் பழனிசாமி, ஸ்டாலின் பேச சென்னை உயர் நீதிமன்றம் தடை
Published on

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 91 நாடாளுமன்ற தொகுதிகளில் கடந்த 11ந்தேதி தேர்தல் நடந்தது. அதை தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 18ந்தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கான வாக்கு பதிவு நடக்கிறது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு கட்சியின் தலைவரும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தேர்தல் பிரசாரத்தில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசியதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு சார்பில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு, மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மு.க. ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மு.க. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது.

இந்த தடையை நீக்கக்கோரி தமிழக அரசு தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதன்மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. இதில், கோடநாடு விவகாரம் பற்றி முதல் அமைச்சர் பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகிய இருவரும் பேச கூடாது என நீதிமன்றம் தடை விதித்து இந்த மனு முடித்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த தடையை மீறி பேசினால் நீதி துறையில் தலையிடுவதாக கருதப்படும் என தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com