கோடநாடு வழக்கு: முக்கிய குற்றவாளியான சயானிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று விசாரணை

கார் டிரைவர் கனகராஜூக்கு பிறகு கோடநாடு பங்களா ரகசியங்களை அறிந்தவர் சயான் என கூறப்படுகிறது.
கோடநாடு வழக்கு: முக்கிய குற்றவாளியான சயானிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று விசாரணை
Published on

கோவை,

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், சயான், வாளையார் மனோஜ், ஜிஜின், திபு, ஜம்சீர் உட்பட 11 பேரை நீலகிரி மாவட்ட போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கில் முக்கிய ஆசாமியான கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் இறந்தார். இந்த இறப்பு பல்வேறு சர்ச்சையை கிளப்பியது. கோடநாடு பங்களாவில் கண்காணிப்பு கேமரா ஆபரேட்டராக இருந்த தினேஷ் என்பவரும் கடந்த 2017-ம் ஆண்டில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரமும் மர்மமாக இருக்கிறது. கடந்த 2021-ம்ஆண்டு அக்டோபர் மாதம் கனகராஜின் அண்ணன் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு தொழில் நுட்ப ஆய்வு பணி நடக்கிறது. இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மறு விசாரணை நடத்தினர். சசிகலா உட்பட 300-க்கும் மேற்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையே இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயானிடம் இன்று (வியாழக்கிழமை) கோவை அவினாசி ரோட்டில் உள்ள பி.ஆர். எஸ். வளாகத்தில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை நடத்தப்படவுள்ளது. இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. சயான் கோவையில் இருந்து கேரளா சென்ற போது அவரின் கார் விபத்தில் சிக்கியது. கார் ஓட்டிய அவர் உயிர் தப்பினார்.

சயானின் மனைவி, மகள் இறந்தனர். இந்த விபத்து விவகாரத்தின் பின்னணியும் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. சயானிடம் போலீசார் பல முறை விசாரணை நடத்திய நிலையில் மீண்டும் மறு விசாரணைக்கு சி.பி.சி.ஐடி போலீசார் அழைத்துள்ளனர். கார் டிரைவர் கனகராஜூக்கு பிறகு கோடநாடு பங்களா ரகசியங்களை அறிந்தவர் சயான் என கூறப்படுகிறது.

இவர் மூலமாகவே மற்றவர்கள் கோடநாடு பங்களாவிற்குள் சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். சயான் கோடநாடு வழக்கில் முக்கிய தகவல்களை தெரிவிக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com