கோடநாடு வழக்கு - மாவட்ட நீதிபதியிடம் 3 பென் டிரைவ்களை சமர்ப்பித்த சிபிசிஐடி போலீசார்

கோடநாடு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜம்சீர் அலி, தீபு ஆகியோரிடம் செல்போன்கள், சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன.
கோடநாடு வழக்கு - மாவட்ட நீதிபதியிடம் 3 பென் டிரைவ்களை சமர்ப்பித்த சிபிசிஐடி போலீசார்
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. இந்த சம்பவத்தை சேலம் ஆத்தூரைச் சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் அரங்கேற்றியது. இதில் கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விட்டார்.

இதையடுத்து போலீசார் இதில் தொடர்புடையதாக சயான், வாளையார் மனோஜ் உள்பட கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட பின், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, 49 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஊட்டி கோர்ட்டு நீதிபதியிடம் 3 பென் டிரைவ்களை சிபிசிஐடி போலீசார் சமர்ப்பித்துள்ளனர். 3 பென் டிரைவ்களும் விரைவில் கோவையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தகவல்கள், பதிவு செய்து பெறப்பட உள்ளன. ஆய்வு முடிவுகள் மூலம் சிபிசிஐடி போலீசாருக்கு முக்கிய ஆதாரங்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கோடநாடு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜம்சீர் அலி, தீபு ஆகியோரிடம் செல்போன்கள், சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com