

சென்னை,
சென்னை ஐகோர்ட்டு உத்தரவை பெற்று, கோடநாடு வழக்கில் மீண்டும் விசாரணையை தமிழக அரசு முன்னெடுத்திருக்கிறது. இதற்கு சட்டமன்றத்தில் அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.
இந்தநிலையில் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று நடந்த சமயத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று காலை 11 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு வந்தனர். அவர்களுடன் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அமைப்பு செயலாளர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், வழிகாட்டுக்குழு உறுப்பினர் சி.வி.சண்முகம் ஆகியோரும் வந்தனர்.
கவர்னரிடம் மனு
அங்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை கண்டித்து எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மனு அளித்தனர். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடந்தது.
கவர்னரை சந்தித்துவிட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி பேட்டி
தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்திருக்கிறது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஊழல்களால் தங்களது பாக்கெட்டுகளை நிரப்புவதிலேயே மும்முரமாக இருக்கிறார்கள். கொரோனா நோயை கட்டுப்படுத்த முடியாமல், அதை மறைப்பதற்காக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய்யான வழக்குகளை போட்டு வருகிறார்கள்.
தி.மு.க. அரசின் குறிக்கோள் ஊழல், வசூல் செய்தல், பழி வாங்குதல். அதைத்தான் தி.மு.க. அரசு தொடர்ந்து செய்து வருகிறது. 100 நாளில் வசூலிப்பதில்தான் அவர்கள் சாதனை செய்திருக்கிறார்கள். அரசு அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர் வரை தமிழகம் முழுவதும் பணி இடமாற்றம் செய்ததுதான் அவர்களது சாதனை. இந்த 100 நாட்களில் மக்கள் வேதனையையும், சோதனையையும்தான் பெரும்பாலும் அடைந்து இருக்கிறார்கள்.
கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள்
அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட நெடுஞ்சாலைத் துறை, பொதுத்துறை, ஊராட்சித்துறை பணிகளை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதுதான் இவர்களது சாதனை.
முந்தைய தி.மு.க. ஆட்சியின்போது 13 அமைச்சர்கள் மீது வழக்குகள் போடப்பட்டு அது நிலுவையில் உள்ளது. அந்த வழக்குகளை தற்போது வேகவேகமாக முடித்து வைக்க ஆளுங்கட்சி முற்படுகிறது. இதனை மறைப்பதற்காக எங்களது முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீது வழக்குகள் போடுகிறார்கள். சோதனைகள் நடத்தி திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகிறார்கள்.
முடியும் தருவாயில் வழக்கு இருக்கும்போது...
கோடநாடு இல்லத்துக்கு சயானின் கூட்டாளிகள் அத்துமீறி சென்று கொள்ளையடித்து, காவலரை கொலையும் செய்துள்ளனர். இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வழக்கு முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த வழக்கு மீது இப்போது மீண்டும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதை தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளதாக கூறுகிறார்.
தேர்தல் அறிக்கைக்கும், இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை. கோடநாடு வழக்கு சட்ட ரீதியாக நடைபெறும் வழக்கு. வாக்குறுதி கொடுப்பதற்காக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ஒப்பிடக்கூடாது. இந்த வழக்கை 3 மாதங்களில் முடித்து விட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசியல் நிர்ப்பந்தம்
குற்றப்பின்னணி உள்ளவர்களுக்காக தி.மு.க. அரசு ஏன் இவ்வளவு அக்கறையோடு வாதாடி கொண்டிருக்கிறது? எப்போதெல்லாம் நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தி.மு.க.வை சேர்ந்த வக்கீல்கள் இவர்களுக்கு ஆதரவாக ஆஜராகி வாதாடி இருக்கிறார்கள். ஒரு நல்ல அரசு குற்றவாளிகளை தண்டிக்கும் அரசாக இருக்க வேண்டுமே, தவிர பாதுகாக்கும் அரசாக இருக்கக்கூடாது.
இந்தநிலையில் குற்றவாளிகள் ரகசிய வாக்குமூலம் கொடுத்ததாகவும், இதில் நான் உள்பட சிலரது பெயரை இணைப்பதாக கூறுகிறார்கள். இது உண்மையா என்று தெரியவில்லை. நீதிமன்றத்தில் முறையான அனுமதி பெறாத நிலையில் அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக மீண்டும் சயானை அழைத்து போலீசார் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
எனவே திட்டமிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, நேரடியாக அரசியலை சந்திக்க முடியாத தி.மு.க. குறுக்கு வழியில் ஏதேதோ ஜோடித்து இந்த வழக்கை திசை திருப்பப் பார்க்கிறார்கள். வெள்ளை அறிக்கை என்று ஒரு வெற்று அறிக்கையை வெளியிட்டார்கள். இது மக்களிடம் எடுபடவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள். அதில் இன்று வரை நிலையான முடிவு எட்டப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.