

நாகப்பட்டினம்,
பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் கோடியக்கரை சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் சீசன் தொடங்கி உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் கோடியக்கரை சரணாலயத்தில் குறிப்பிட்ட பருவ காலத்தில் நிலவும் மிதமான தட்பவெட்ப நிலையையும், சதுப்பு நிலங்களில் நிறைந்திருக்கும் உணவுகளையும் தேடி வெளிநாட்டு பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து சில மாதங்கள் முகாமிடுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு கோடியக்கரையில் தற்போது பறவைகளின் சீசன் தொடங்கி உள்ளது.
இந்த ஆண்டு கோடையை தாண்டியும் வெயில் சுட்டெரித்தது. ஆறுகள், குளங்கள், ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டன. கடுமையான வறட்சியால் கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டன. கோடியக்கரை சதுப்புநில காட்டிலும் வறட்சி நிலவியது. தற்போது வடகிழக்குப் பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோடியக்கரைக்கு வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கி உள்ளன. வழக்கமாக பறவைகள் அக்டோபர் முதல் வாரத்திலேயே வரத்தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு சுட்டெரித்த வெயில் காரணமாக சீசன் தாமதமாக தொடங்கி உள்ளது.
ரஷியா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அரிய வகை பறவைகள் பல்லாயிரக்கணக்கான கி.மீ. தூரம் பறந்து கோடியக்கரைக்கு வருகின்றன. 294-க்கும் மேற்பட்ட வகையிலான பறவைகளை இங்கு காண முடியும். செங்கால்நாரை, கூழைகிடா, பூநாரை, கடல்காகம், கடல் ஆலா, உள்ளான், கரண்டி மூக்கு உள்ளான், வரித்தலைவாத்து, கூனி அரிச்சான் ஆகிய பறவை இனங்கள் கோடியக்கரையின் 'ரெகுலர்' விருந்தாளிகள்.
குறிப்பாக கோடியக்கரை சரணாலயத்தில் சீசன் காலமான அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை லட்சக்கணக்கான பூநாரைகள் ஒன்றாக சிறகடித்து பறப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். கோடியக்கரை சரணாலயத்தை சுற்றி வரும் வெளிநாட்டு பறவைகள் கூட்டம் அங்குள்ள சதுப்பு நிலக்காடுகளில் இரை தேடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன. தற்போது பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் நிலவுதாலும் பறவைகளுக்கு உணவுகள் கிடைப்பதாலும் வெளிநாட்டு பறவைகள் கூட்டம், கூட்டமாக வர தொடங்கி உள்ளனர்.
கோடியக்கரை சரணாலய பகுதியில் உள்ள இரட்டைத்தீவு, கோவைத்தீவு, நெடுந்தீவு, பம்பு ஹவுஸ் கடற்கரை பகுதி ஆகிய இடங்களில் காலை, மாலை வேளைகளில் பறவைகள் அதிகளவில் தென்படுவதாக பறவை ஆராய்ச்சி விஞ்ஞானி சிவக்குமார் தெரிவித்துள்ளார். கோடியக்கரைக்கு கூட்டம், கூட்டமாக பறவைகள் வருவது சுற்றுலா ஆர்வலர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.