கொள்ளிடம், காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம்

மேட்டூர் அணை முழுகொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் திருச்சி கொள்ளிடம், காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பாதுகாப்பு கருதி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் மூடப்பட்டது.
கொள்ளிடம், காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம்
Published on

ஜீயபுரம், ஜூலை.19-

மேட்டூர் அணை முழுகொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் திருச்சி கொள்ளிடம், காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பாதுகாப்பு கருதி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் மூடப்பட்டது.

கரைபுரண்டு ஓடிய தண்ணீர்

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூரை நோக்கி பெருக்கெடுத்து ஓடி வந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது.

இதனையடுத்து உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. திறந்து விடப்பட்ட நீர் நாமக்கல், ஈரோடு வழியாக கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை நேற்று முன்தினம் வந்தடைந்தது. காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து இருகரைகளையும் தொட்டபடி வந்த தண்ணீர் முக்கொம்பு மேலணையை அடைந்தது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 767 கன அடி தண்ணீர் முக்கொம்பை வந்தடைந்தது. இதில் 49 ஆயிரத்து 553 கனஅடி காவிரி ஆற்றிலும், 73 ஆயிரத்து 339 கன அடி நீர் கொள்ளிடம் ஆற்றிலும் திறந்து விடப்பட்டன. 875 கனஅடி நீர் அய்யன்வாய்க்கால், கட்டளை வாய்க்காலில் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டன. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கொள்ளிடம் காவிரி கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, செல்பி எடுக்கவோ முயற்சிக்க வேண்டாம் என திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் அறிவுறுத்தி இருந்தார். முன்னதாக கொள்ளிடத்தில் கூடுதல் தண்ணீர் திறப்பால் அங்கு குடிசை அமைத்து முகாமிட்டிருந்த சலவை தொழிலாளர்கள் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

அம்மா மண்டபம் மூடல்

அதேபோல் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் அதிக அளவில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் புனித நீராடுவார்கள். மேலும் தர்ப்பணம் கொடுக்க வருபவர்களும் காவிரி ஆற்றில் நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டுக்கொண்டு வெள்ள நீர் கரைபுரண்டு செல்கிறது.

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அம்மா மண்டபம் அந்த பகுதியில் உள்ள அனைத்து படித்துறைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்தவர்களுக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டு பதாகை வைத்துள்ள போலீசார் சுற்றுலா பயணிகளுக்கு உரிய அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வைக்கிறார்கள்.

விவசாயிகள் மகிழ்ச்சி

ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு நெருங்கி வரும் நிலையில் காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியையும், புனித நீராட வரும் பக்தர்களுக்கு ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் போதிய அளவு மழை இல்லை. இதனால் விவசாயிகள் கவலையில் இருந்தனர். கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும், அது பற்றாக்குறையாகவே இருந்தது.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் நேற்று காலை முக்கொம்பு காவிரி ஆற்று வெள்ளப்பெருக்கை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து திருப்பராய்த்துறை காவிரி ஆற்று பகுதியில் காவிரி கரையோரம் இருந்த குடிசைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதியையும் பார்வையிட்டார். அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஊராட்சிக்கு குடிநீர் வழங்கும் மின் மோட்டார் அறையும், குடிநீர் தொட்டியும் காவிரி ஆற்று வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் வரக்கூடிய தண்ணீரை கண்காணித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com